ஈரோட்டில் செல்போன் திருடிய தந்தை-மகன் கைது
ஈரோட்டில், செல்போன் திருடிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு வீரப்பன்சத்திரம் சுப்பிரமணியசிவா வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 29). ஜவுளிக்கடை உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு சென்று, ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள புதிய ஸ்மார்ட் போன் வாங்கி உள்ளார். பின்னர் அவர் அந்த செல்போனை அங்குள்ள ஒரு மேஜையில் வைத்துவிட்டு, கடை ஊழியரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவரது பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஒருவர் அந்த செல்போனை எடுத்து அருகில் நின்று கொண்டு இருந்த மற்றொருவரிடம் நைசாக கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றனர். இதை கவனித்த கடை ஊழியர் “திருடன், திருடன்” என கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் துரத்திச்சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பெரியசடையம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடபதி (55), ராஜ்குமார் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் தந்தை, மகன் என்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடபதி, ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.