ஸ்ரீமுஷ்ணம் அருகே: மாணவியை கடத்தி சென்று திருமணம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொளத்தங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய மாணவி. இவர் தென்னூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக அந்த மாணவி பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயபால்(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய மாணவியை ஜெயபால் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த ஜெயபாலை பிடித்து, கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஜெயபாலை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.