பெங்களூரு அருகே நேருக்கு நேர் மோதி லாரி-மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தன கல்லூரி மாணவர் சாவு
பெங்களூரு அருகே நேருக்கு நேர் மோதி லாரி-மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா பட்டேமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 19). இவர், கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று காலையில் பெங்களூரு புறநகர் ஆவலஹள்ளி அருகே மண்டூர் மெயின் ரோட்டில் பசவராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும், பசவராஜின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட பசவராஜ் தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அதே நேரத்தில் லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டதுடன், அதனை கவனிக்காமல் டிரைவர் ஓட்டிச் சென்றதால் சில அடி தூரம் வரை இழுத்து சென்றது. பின்னர் திடீரென்று லாரியும், மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது. உடனே லாரியில் இருந்து கீழே குதித்து டிரைவர் உள்பட 2 பேர் உயிர் தப்பினார்கள். இதுபற்றி அறிந்ததும் ஆவலஹள்ளி போலீசார் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கல்லூரி மாணவர் சாவு
பின்னர் அவர்கள் லாரியில் பிடித்து எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். அதே நேரத்தில் லாரியின் பின்பக்கத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர்களையும் தீயணைப்பு படைவீரர்கள் வெளியே எடுத்தனர். தீயணைப்பு படைவீரர்களின் நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. ஆனாலும் லாரியும், மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமானது. லாரியில் 50-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்தது. அந்த சிலிண்டர்களில் கியாஸ் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது.
லாரியின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதுடன், சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டதால், அதில் இருந்து பெட்ரோல் வெளியேறி லாரியும், மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில், உயிருக்கு போராடிய பசவராஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பசவராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.