18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு பற்றி எங்களுக்கு பயம் இல்லை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு பற்றி எங்களுக்கு பயம் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் மணல் சிற்பம் திறப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடைபெற்றது, இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஐன் கலந்து கொண்டு மணல் சிற்பத்தை திறந்து வைத்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பாண்டியராஐன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகளின் கடும் உழைப்பாலும், முயற்சியாலும் போலியோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. போலியோ ஒழிப்பு பணிக்கு கடந்த 30 வருடங்களில் ரோட்டரி சங்கங்கள் ரூ.35,000 கோடி தந்துள்ளனர், அது மட்டும் இன்றி 15 ஆயிரம் பேர் இந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய கூட்டு முயற்சியால் இந்தியாவில் இருந்து போலியோ ஒழிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்தது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு பற்றி எங்களுக்கு எந்த பயமும் இல்லை. இந்த வழக்கில் நான்கு விதமான தீர்ப்புகள் வர வாய்ப்பு உள்ளது. அதில் எந்தவிதத்தில் தீர்ப்பு வந்தாலும் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும், அரசாங்கத்தை பொறுத்தவரை எங்களுக்கு பயமோ, கவலையோ கிடையாது. நாங்கள் சகஜமாக பணியாற்றி வருகிறோம்.
எந்த நலத்திட்டங்களும், வளர்ச்சி திட்டங்களும் தடைபடாமல் நடைபெற்று வருகிறது. கவலைப்பட வேண்டியவர்கள் தான் தற்போது ஒன்று கூடியுள்ளனர். ஒரு வாரத்தில் அல்லது பத்து நாட்களில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை கட்சி அனுவலகத்தில் நிறுவப்படும்.
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.