விபத்துகளுக்கு காரணமாக சாலைகளில் திரியும் கால்நடைகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை

விபத்துகளுக்கு காரணமாக சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-10-24 22:15 GMT
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆய்வு செய்தபோது கால்நடைகள் இரவு நேரங்களில் சாலைகளில் திரிந்து கொண்டும், நின்றுகொண்டும், படுத்துக்கொண்டும் இருப்பதால் விபத்து ஏற்படுவது தெரியவந்தது.

ஆகவே கால்நடைகளை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை தொழுவங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கால்நடைகளை தன்னிச்சையாக விட்டு விடுவதால் அவை பகல் நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், இரவு நேரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது.

ஆகவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதையும், விபத்து ஏற்படுவதையும் தடுக்க, சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள், மாவட்ட நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டு கோசாலைகளில் ஒப்படைக்கப்படும். அவ்வாறு கைப்பற்றப்படும் கால்நடைகளை யாரேனும் உரிமை கோரினால் அதற்கான பராமரிப்பு செலவினத்தை ஈடுசெய்த பின்னரே கால்நடைகள் விடுவிக்கப்படும். எனவே பொதுமக்கள் கால்நடைகளை தங்கள் தொழுவங்களில் வைத்து பராமரித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்