கவர்னர் கிரண்பெடி தனது அதிகார எல்லையை தாண்டி செயல்படுகிறார் - சஞ்சய் தத் குற்றச்சாட்டு

கவர்னர் கிரண்பெடி தனது அதிகார எல்லையை தாண்டி செயல்பட்டு வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2018-10-24 23:45 GMT

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், புதுவை மாநில மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வந்தார். இங்கு எம்.எல்.ஏ.க்கள், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், ஐ.என்.டி.யு.சி., உள்பட ஒவ்வொரு அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–

கூட்டாட்சிக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு புதுவை தான் சிறந்த எடுத்துக்காட்டு. பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மை பலத்துடன் இருக்கும் பா.ஜ.க. பணத்தை வைத்து குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. புதுவையில் அது நடக்காது என்பதால் கவர்னரை பயன்படுத்தி கொல்லைபுறமாக ஆட்சி நடத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக கவர்னரை வைத்து பிரதமர் மோடி ஆட்சி நடத்த முயற்சி செய்கிறார். இதற்கு புதுவை தான் மிகச்சிறந்த உதாரணம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் கவர்னர் மாளிகைக்கு உரிய அதிகாரத்தை, கவர்னர் கிரண்பெடி தவறாக பயன்படுத்தி வருகிறார். தனது அதிகார எல்லையை தாண்டியும், அரசியல் சாசன சட்டங்களுக்கு எதிராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இது மக்களாட்சிக்கு எதிரானது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது மக்களவை, மாநிலங்களவையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுத்து பிரச்சினையை எழுப்புவார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலரும் வகையில் புதுவையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் ஆதரவு கேட்டு புதுவை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கட்சியின் தொண்டர்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சக்தி செயலி’ தமிழகம் மற்றும் புதுவையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும். புதுச்சேரியிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் பணிகள் நடக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லாத இதர கட்சிகள் வென்ற தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

தற்போது கூட்டணி என்பது தி.மு.க.வுடனானது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி என்பது குறித்து வெளியாகும். அதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். மீ டூ புகார்களில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதில் தான் மோடி அரசு உள்ளது. பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து பெண்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என்பதே உண்மையான ஸ்லோகனாக தற்போது உள்ளது.

அவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்