கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-10-24 22:45 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் கங்கை நதி வரை போர் நடத்தி வெற்றி பெற்றதற்காக அடையாள சின்னமாக இந்த கோவிலை கலை நயத்துடனும் மிக பிரமாண்டமாகவும் கட்டினார்.

போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால் விடும் வகையில், சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 33 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர்.அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 22-ந்தேதி கணக்க விநாயகருக்கு அபிஷேகமும், 23-ந்தேதி பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து 34-வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் இருந்து 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை கொண்ட பச்சரிசியை 6 கொதிகலன் நீராவி அடுப்பில் வைத்து சமைத்தனர். பின்னர் சமைத்த சாதத்தை அருகில் ஓலைப்பாயில் ஆற வைத்தனர்.

பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடையில் சாதத்தை சுமந்து பிரகதீஸ்வரர் மூலஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பிரகதீஸ்வரருக்கு சாதம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பிரகதீஸ்வரருக்கு காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட பூமாலை அணிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் சிவாய நம... நமச்சிவாய நம... என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து இருந்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு பிரகதீஸ்வரர் மீது சாத்தப்பட்ட சாதத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் பக்தர்களுக்கு வழங்கிய சாதம் போக மீதம் உள்ள சாதத்தை அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.

அன்னாபிஷேகத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் பாரதிராஜா, அன்னதான கமிட்டி பொறுப்பாளர் கோமகன், தொல்லியல் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அன்னாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், காஞ்சி சங்கரமட நிர்வாகிகள், அன்னாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர். அன்னாபிஷேக விழாவையொட்டி ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லஷ்மிதரன் தலைமையில், மருத்துவக்குழுவினரும், ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் முருகன் தலைமையிலும் தீ தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்