தையல் கலைஞர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் சங்க மாநாட்டில் தீர்மானம்

தையல் கலைஞர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-10-24 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் ஐடா ஹெலன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் தாசம்மாள் சங்க கொடியேற்றினார். பரிமளாபாய் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சந்திரகலா அறிக்கை சமர்ப்பித்தார்.

மாநாட்டில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், உழைக்கும் பெண்கள் அமைப்பின் இணை அமைப்பாளர் சித்திரா, சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் அந்தோணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன் நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தையல் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தையல் நலவாரிய பணப்பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்சனாக ரூ.3 ஆயிரமும், திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும்.

தையல் தொழில் செய்யும் பெண்களுக்கு 50 வயதுக்கு மேல் பென்சன் வழங்க வேண்டும். இயற்கை மரண நிதியை ரூ.1 லட்சமாகவும், விபத்து மரண நிதியை ரூ.5 லட்சமாகவும் உயர்த்தி வழங்குதல் அவசியம். கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்