வெலிங்டன் அருகே ஊட்டி மலைரெயில் பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வெலிங்டன் அருகே ஊட்டி மலைரெயில் பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-24 22:15 GMT

குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, இயற்கை எழிலை கண்டு ரசித்து செல்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமும் மலைரெயில் இயக்கப்படுகிறது. மலைரெயில் பாதையின் ஓரங்களில் ஓங்கி வளர்ந்த ராட்சத மரங்கள் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மலைரெயில் பாதையில் விழுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் வெலிங்டன் ரெயில் நிலையம் அருகே மலைரெயில் பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்ட மலைரெயில் வெலிங்டன் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி வந்த பயணிகள் ரெயில் அருவங்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதியடைந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மின்வாள் மூலம் மலைரெயில் பாதையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் சேதம் அடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2½ மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

மேலும் செய்திகள்