தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையம் 3-வது நாளாக விசாரணை கோர்ட்டில் இருந்து ஆவணங்கள் பெற சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தியது. மேலும், கோர்ட்டில் இருந்து ஆவணங்கள் பெற சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களிடம் 4 கட்டங்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
தற்போது 5-வது கட்ட விசாரணை, கடந்த 22-ந் தேதி முதல் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 45 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. நேற்று 3-வது நாளாக 11 பேர் ஆஜராக அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதில் 8 பேர் மட்டும் நேற்று ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இன்றும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதேபோன்று துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சேகரித்த ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
அதே போன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவில்பட்டி கோர்ட்டில் ஏராளமான ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த ஆவணங்களை வழக்கு விசாரணைக்காக பெற நேற்று கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். தொடர்ந்து ஆவணங்களை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.