தஞ்சை கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

தஞ்சை கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Update: 2018-10-24 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தன. தஞ்சை காந்திஜிசாலை, ரெயிலடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூக்கடைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் பல்வேறு கடைகள் முன்பு ஆக்கிரமித்து கொட்டகைகள் போடப்பட்டு இருந்தன.

பல கடைகள் முன்பு கீற்றுகளாலும், ஒரு சில இடங்களில் தகரங்களாலும் கொட்டகைகள் போடப்பட்டு இருந்தன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.


இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் மாரிமுத்து, துணை பொறியாளர் இளவழகன் மேற்பார்வையில் 20–க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லின் எந்திரமும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் உடனடியாக லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. பல கடைகளில் கடைக்காரர்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தஞ்சை காந்திஜிசாலை, ரெயிலடி பகுதிகளில் மட்டும் 50–க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையொட்டி தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்