முல்பாகலில் ரூ.50 ஆயிரம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு உறவினர் கைது

முல்பாகலில் ரூ.50 ஆயிரம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். இதுதொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-10-23 23:01 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா நங்கலி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரிக்கா. இந்த தம்பதியின் மகன் நந்தீஷ் (வயது 4). இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இரவு நந்தீஷ், இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றான். ஆனால் வெகு நேரமாகியும் அவன் திரும்பி வரவில்லை. இதனால், ஈஸ்வரும், சந்திரிக்காவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் நந்தீசை பல இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நேற்று முன்தினம் காலை இதுகுறித்து நங்கலி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தீசை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சிறுவனை யாராவது கடத்தி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம், ஈஸ்வரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், நான் தான் உனது மகனை கடத்தி உள்ளேன். எனக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் சிறுவனை விடுவிப்பேன். மாறாக, போலீசிடம் சென்றால் சிறுவனை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வர், இதுகுறித்து நங்கலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார், ஈஸ்வரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போன் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது அந்த எண், முல்பாகல் டவுனில் உள்ள ஒரு ரூபாய் காய்ன் பாக்ஸ் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். ஈஸ்வரின் உறவினர்கள், நண்பர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அந்த சமயத்தில், ஈஸ்வரின் பக்கத்து வீட்டை சேர்ந்த அவருடைய உறவினரான நாகேஷ் என்பவர் மாயமாகி இருந்தார். அவருடைய செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது, செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ ஆகியிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு நாகேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, நாகேசின் செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, நாகேஷ், பிச்சகுண்டஹள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அந்த சமயத்தில் நாகேஷ், சிறுவன் நந்திசுடன் உறவினர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. அதன்பின்னர் போலீசார் நாகேசை கைது செய்து, சிறுவன் நந்தீசை மீட்டனர். அதன்பின்னர் சிறுவன் நந்தீசை, போலீசார் அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நங்கலி போலீசார் நாகேசிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நாகேசுக்கு ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டதால், சிறுவன் நந்தீசை கடத்தி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவனை காணவில்லை என புகார் கொடுத்து, 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி கடோச் பாராட்டினார்.

மேலும் செய்திகள்