மாணவி பாலியல் புகார்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது விடுதலை செய்யக்கோரி மாணவர்கள் மறியல்

செங்கம் அருகே மாணவி பாலியல் புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-23 23:45 GMT
செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கண்ணக்குருக்கையை அடுத்த மேல்நாச்சிப்பட்டு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பள்ளியின் கணித ஆசிரியர் கண்ணன் (வயது 46) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் பெற்றோர் புகார் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த புகார் மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று விசாரிக்க நேற்று முன்தினம் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்களுடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியருக்கும், அவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் அவர்கள் அனைவரும் பள்ளிக்குள் புகுந்தனர்.

வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த கண்ணனை அவர்கள் அனைவரும் சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்த பாய்ச்சல் போலீசார் அவரை அங்கிருந்து மீட்டுச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்ணன் மீது செங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர் மீது போக்சோ, பாலியல் தொல்லை, தீண்டாமை உள்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய மேல்நாச்சிப்பட்டை சேர்ந்த சந்தோஷ் (வயது 19) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஆசிரியர் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஆசிரியர் கண்ணனுக்கு ஆதரவாக அவரை விடுதலை செய்யக்கோரி பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து கண்ணக்குருக்கை - மேல்நாச்சிப்பட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து வகுப்புக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆசிரியர் கண்ணனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும், தாக்கியதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறுகையில், ‘பணியில் இருந்த ஆசிரியரை சமூக விரோதிகள் தாக்கி உள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும். ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடில் பள்ளிகளை பூட்டி போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

மேலும் செய்திகள்