பாணாவரம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை காப்பாற்ற சென்ற மகனும் பலி

பாணாவரம் அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற மகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-10-23 22:00 GMT
பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் பாணாவரம் அருகே மேலேரி கிராமம் பஜனை கோவில் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 40), விவசாயி. இவருடைய மனைவி உமா (35), இவர்களுடைய மகன்கள் சசிகுமார் (16), வாசுதேவன் (8).

சசிகுமார் நெமிலியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வாசுதேவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

உமாபதி புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடனில் புதிய டிராக்டர் வாங்கி உள்ளார். ஏற்கனவே பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ள நிலையில் டிராக்டரும் கடனில் வாங்கியதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் உமாபதி நிலத்துக்கு சென்றுவிட்டார். மாலை 6 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த உமா மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த மகன் வாசுதேவன் ஓடிவந்து தாயை காப்பாற்ற முயன்றார். பின்னர் உமாவை வாசுதேவன் கட்டி பிடித்துள்ளார். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை வாசுதேவனை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே வாசுதேவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாயும், மகனும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்