வைகை தண்ணீரை கண்மாய்களில் சேமித்து வைக்க நடவடிக்கை; அதிகாரிகளுக்கு, அமைச்சர் பாஸ்கரன் அறிவுறுத்தல்

வைகை ஆற்றில் செல்லும் தண்ணீரை கண்மாய்களில் சேமித்து வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2018-10-23 22:45 GMT

திருப்புவனம்,

வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த ஆண்டில் 2–வது முறையாக அணை முழு கொள்ளளவான 69 அடியை எட்டியது. தொடர்ந்து அப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திருப்புவனம் வைகை ஆற்று பாலம் அருகே ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தாண்டி செல்கிறது.

இதனையடுத்து திருப்புவனம் வந்த வைகை தண்ணீரை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். அதன்பின்னர் அமைச்சர் பாஸ்கரன் சருகணி ஆறு பிரிவு செயற்பொறியாளர் வெங்கட்ரமணனிடம் தண்ணீர் வரும் விவரத்தை கேட்டறிந்தார். இதையடுத்து 1,400 கன அடி தண்ணீர் அணையில் வருவதாகவும், அதில் 1,000 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. மீதமுள்ள 400 கன அடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் அவர் தெரிவித்தார். மேலும் வைகை ஆற்று பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் இந்த தண்ணீரை கொண்டு சென்று சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.

பின்னர் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்றும், கழிப்பறைகள் கட்ட வேண்டும், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து திருப்புவனம் ஒன்றிய ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் ஆகியோரிடம் திட்ட மதிப்பீடு செய்வதற்கும், குடிதண்ணீர் சுத்தகரிப்பு இயந்திரம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அறிவுறுத்தினர். தொடர்ந்து திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளை பார்வையிட்டு அங்கிருந்த டாக்டர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். ஆய்வின் போது திருப்புவனம் தாசில்தார் பாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சிங்காரவேலன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்