கீழச்சிவல்பட்டி ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல கோரி வழக்கு; கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கீழச்சிவல்பட்டி ஊருக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்வது தொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-23 22:30 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த வக்கீல் முருகேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு மனு தாக்கல் ஒன்று செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலத்தில் இருந்து மதுரை–தஞ்சாவூர் வழித்தடத்தில் 23 அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பஸ்கள் கீழச்சிவல்பட்டி ஊருக்குள் வந்து செல்வதில்லை. இதனால் கீழச்சிவல்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 30–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவசர காலங்களில் மருத்துவ உதவிக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இங்கு வந்து சென்ற பஸ்கள் அனைத்தும் தற்போது தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால், கீழச்சிவல்பட்டி ஊருக்குள் வருவதில்லை. இதற்காக கடந்த 2015–ம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் அரசு பஸ்சின் டிரைவர்கள் கீழச்சிவல்பட்டி ஊருக்கு என தனியாக பஸ் நிறுத்தம் இல்லை என வாய்மொழியாக கூறி இங்கு வர மறுக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் காரைக்குடி மண்டல போக்குவரத்து கழகம் அளித்துள்ள பதிலில், மதுரை–தஞ்சாவூர் வழித்தடத்தில் கீழச்சிவல்பட்டி ஒரு ஸ்டேஜ் ஆக உள்ளது என பதில் தந்துள்ளனர். இதை ஆதாரமாக கொண்டு புகார் கொடுத்தும் பஸ்கள் எங்கள் ஊருக்கு வந்து செல்ல எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே பொதுமக்கள் பயன்படும் வகையில் அனுமதிக்கப்பட்ட பஸ்களை கீழச்சிவல்பட்டி ஊருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்குவரத்து கழகத்திற்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஸ்குமார் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் வாஞ்சிநாதன் ஆஜரானார்.

முடிவில், இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்