மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கடைகளை அடைத்து உண்ணாவிரதம்
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் வணிகர் சங்க பேரமைப்பினர் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
கோவை,
மத்திய, மாநில அரசுகளால் இந்திய வணிகர்கள் புறக்கணிக்கபடுவதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோவை சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
உண்ணாவிரதத்தை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா வரவேற்றார். போராட்டத்தின் நோக்கம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் கோவிந்தராஜுலு பேசினார்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் பேசும் போது கூறியதாவது:–
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்று உறுதி அளித்திருந்த மத்திய, மாநில அரசுகள், மாநில தலைநகர் மட்டுமின்றி மாவட்டங்கள்தோறும் ஏஜென்சிகளுக்கு அனுமதி வழங்கி ஆன்லைன் மூலம் சிறு,குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகின்றன. பன்னாட்டு கம்பெனிகள் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது பொதுமக்களை பாதிக்கும். ஆன்லைன் வர்த்தகத்தை உடனே தடை செய்யவேண்டும்.
தமிழக அரசு 1.1.2019 முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் பேக்கிங் செய்யும் மறுசுழற்சி செய்ய முடியாத பைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப் பட்டு உள்ளது. சிறு வணிகர்கள், குறுந்தொழில் முனைவோர் பேக்கிங் செய்யும் மறு சுழற்சிக்கு ஏற்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒருதலைபட்சமானது. இந்த உத்தரவு பன்னாட்டு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் தடைக்கு முடிவெடுக்கும் வரை தமிழக அரசு இந்த தடையை அமல்படுத்தக்கூடாது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு பொருட்கள் தயாரிக்கும் மையங்களில் தரம் எடுத்து சோதனை செய்ய வேண்டும். சிறுவணிகர்களை பாதிக்கும் வகையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் கே.என்.பாலு, பிளாஸ்டிக் விற்பனையாளர் சங்க தலைவர் பார்த்தீபன், ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் அசோசியேசன் தலைவர் கந்தசாமி, செயலாளர் ஜெப்ரி, பொருளாளர் நடராஜ் உள்பட பலரும் பேசினார்கள்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் பேசும் போது வணிகர்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் பேசி தீர்வு காண்பதாக கூறினார்.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் வகாப், மாநகர செயலாளர் டி.சவுந்தர்ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் பொன் செல்வராஜ், மாநில இணை செயலாளர்கள் சக்திவேல், பாலன், மாநில துணை தலைவர் அரோமா பொன்னுசாமி மற்றும் ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் விற்பனையாளர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை டாக்டர் ஜி.பக்தவச்சலம் முடித்து வைத்து பேசினார்.
போராட்டத்தை முன்னிட்டு கோவை ரங்கேகவுடர் வீதி, செல்வபுரம், பெரியகடை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கடைகள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், கடைகளை அடைத்து விட்டு வணிகர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.