ஆலங்காயம் பகுதியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றியவர் உள்பட 3 பேர் கைது
ஆலங்காயத்தில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் புலவர்பள்ளி என்ற ஊரை சேர்ந்த வெங்கடேசன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று வாலிபர் ஒருவர் வந்தார். கடையில் பொருட்கள் வாங்கிய அவர் 200 ரூபாய் நோட்டை கொடுத்து மீதி சில்லறை கேட்டார். அந்த நோட்டு வித்தியாசமாக இருந்ததால் வெங்கடேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக கூறவே அந்த நபரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு வெங்கடேசன் தகவல் அளித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்த வீரபாண்டியன் (வயது 30) என்பது தெரியவந்தது.
அவர் அளித்த தகவலின் பேரில் கள்ளநோட்டுகளுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மேல்குப்பம் பகுதியை சேர்ந்த துளசிராமன், பிரபாகரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 200 கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கள்ள நோட்டுகளை எங்கிருந்து வாங்கி வந்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது பற்றியும், கள்ளநோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிற்னர்.