லிங்காரெட்டிப்பாளையத்தில் கரும்பு விவசாயிகள் கண்டன முழக்க போராட்டம்
சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.20 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி கரும்பு விவசாயிகள் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கனூர்,
புதுச்சேரி மாநிலம் லிங்காரெட்டிப்பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு ரூ.20 கோடி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவை தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கரும்பு விவசாயிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கக்கோரி நேற்று கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரியும், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கக்கோரியும் லிங்காரெட்டிப்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே இந்த கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் ஆலை மேலாளரை சந்திப்பதற்காக விவசாயிகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
சர்க்கரை ஆலை அருகே ஊர்வலம் வந்ததும், அங்கு அவர்களை காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அதனால் விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதை போலீசார் எடுத்துக்கூறினார்கள். அதைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.