விருதுநகர் நகராட்சியில் திட்டப்பணி நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
விருதுநகர் நகராட்சியில் திட்டப்பணி நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சியின் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர்கள் நாகேந்திரன், வள்ளிக்குட்டி ராஜா, ரமேஷ், சுந்தர், பேபிகாளிராஜன், செல்வரத்தினம், திலக் ஆகியோர் நகராட்சி கமிஷனரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
விருதுநகர் நகராட்சியில் கல்வி நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்த பள்ளிகளுக்கே மீண்டும் முறைகேடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 32–வது வார்டில் உள்ள நகராட்சி பள்ளிக்கு சிமெண்டு கல் பதிக்க நிதி கோரியும் நடவடிக்கை இல்லை. ஒரு சில வார்டுகளுக்கு மட்டுமே சிமெண்டு கல் பதிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அதிகாரிகள் அப்பகுதிகளை நேரடியாக சென்று பார்ப்பது இல்லை.
விருதுநகர் மேலரதவீதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை வேண்டும். காமராஜர் பை–பாஸ் ரோட்டில் பாதாள சாக்கடை தொட்டிகளுக்கு மூடி இல்லாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. செந்திவிநாயகர் தெரு முதல், நகராட்சி அலுவலகம் வரை சாலையை சீரமைக்க வேண்டும். விருதுநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கி 2 வருடம் ஆகியும் எந்தபணியும் செய்யப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.