திருப்பரங்குன்றம் அருகே : சாக்கடை கலந்து வரும் குடிநீரால் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு
திருப்பரங்குன்றம் அருகே குழாய்களில் சாக்கடை கலந்து வரும் குடிநீரால் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ளது, ஹார்விபட்டி. ஊராட்சி, பேரூராட்சி என அந்தஸ்து பெற்ற ஹார்விபட்டி தற்போது மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 97-வது வார்டாக உள்ளது. இங்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இந்த பாதாள சாக்கடை முறையாக பராமரிக்கப்பட்டு வந்ததுடன், இப்பகுதி முழுவதும் சுகாதாரமாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு பாதாள சாக்கடை பராமரிக்கப்படவில்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய்கள் இருந்த இடமே தெரியாமல் உள்ளது. பெரும்பாலான கால்வாய்களில் மூடிகள் இல்லை. இதனால் சாக்கடை கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக மழைநீர், கழிவுநீருடன் கலந்தது. மேலும் கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்து நிற்கிறது.
இந்தநிலையில் பாதாள சாக்கடையின் நீரேற்ற நிலையத்தில் உள்ள 2 மின் மோட்டார்களில் ஒரு மோட்டார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் வெளியேற வழியின்றி தெருக்களில் ஆறாக ஓடுகிறது. மேலும் குடிநீர் குழாய்களில் சாக்கடை கலந்து, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் சாக்கடை கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. ஹார்விபட்டி மில் காலனியை சேர்ந்த பிந்துஸ்ரீ(வயது 5) என்ற சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோன்று அப்பகுதியை சேர்ந்த பலரும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அவதியடைந்து வருகின்றனர். எனவே ஹார்விபட்டியில் அதிகாரிகள் ஆய்வு செய்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், டெங்கு ஒழிப்பு பணியையும், தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.