‘காங்கிரஸ் மூழ்கும் கப்பல்; அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் மூழ்கும்’ - தமிழிசை சவுந்தரராஜன்

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் மூழ்கத்தான் போகும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2018-10-21 23:30 GMT

ஆலந்தூர்,

கோவில்களில் உள்ள பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை நான் ஏற்கிறேன். சபரிமலையில் நடக்கும் போராட்டம் கட்சியினரின் போராட்டம் என்பதைவிட பக்தர்களின் போராட்டம் ஆகும். பக்தர்களின் போராட்டத்தை யாரும் உதாசினப்படுத்த முடியாது.

ஆயிரக்கணக்கான பெண்கள் தெருவில் இறங்கி போராடுவதால் அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். தாமிரபரணி எழுச்சியாகட்டும், சபரிமலையில் உள்ள புரட்சியாகட்டும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கையை புறந்தள்ள முடியாது. பெரும்பான்மையான மக்கள் வாழும் நாட்டில் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வரும்போது போராடக்கூடாது, கட்சி சார்ந்தது என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும்.

சபரிமலை தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பாரதீய ஜனதா கட்சியின் ஒத்துழைப்பு உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை என்பதால் போராட்டத்தில் ஈடுபடுகிறது. ஆனால் வன்முறையில் ஈடுபடவில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்காக 6 மாதங்களுக்கு முன்பே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். தேர்தல் பணி நடந்து வருகிறது. மற்ற கட்சிகளைவிட பாரதீய ஜனதா பணியை தொடங்கிவிட்டது. எந்த ஒரு கட்சியும் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படவில்லை.

தமிழகத்தில் பலம் பொருந்திய கட்சியாகவும், தவிர்க்க முடியாத சக்தியாகவும் பாரதீய ஜனதா கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்காக கட்சிகள் காத்து நிற்கிறது என்பது வேடிக்கையாக உள்ளது.

காங்கிரஸ் ஒரு மூழ்குகின்ற கப்பல். அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் மூழ்கித்தான் போகும். இதை அனைவரும் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் காங்கிரசால் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை மறந்து அவர்களுடன் போகும்போதுதான் வேதனையாக உள்ளது.

இலங்கை சிறையில் கடுமையான அபராதத்துடன் வாடும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். ஆனால் இலங்கை நாட்டின் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வர முடியாது. சட்டத்திட்டங்களின்படி வெளிக்கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

பாரதீய ஜனதா ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். கமல்ஹாசன் யாருடன் போனாலும் எங்களுக்கு கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்