துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.44 லட்சம் குங்குமப்பூ பறிமுதல்; வாலிபர் கைது
துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.44 லட்சம் மதிப்புள்ள ஈரான் நாட்டு குங்குமப்பூ மற்றும் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த சாகுல் அமீது மரைக்கார் (வயது 25) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடைமைகளை பிரித்து சோதனை செய்தனர்.
அதில் 470 பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் விலை உயர்ந்த ஈரான் நாட்டின் குங்குமப்பூவை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அதனுடன் தங்க தகடுகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 107 கிராம் தங்கம் மற்றும் ரூ.44 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ ஈரான் நாட்டு குங்குமப்பூ ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் குங்குமப்பூ விலை அதிகமாக இருக்கும். காஷ்மீர் குங்குமப்பூவுடன் ஈரான் நாட்டு குங்குமப்பூவை கலந்து விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சாகுல் அமீது மரைக்காரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.