காவல்துறை சார்பில் மணல் கடத்தலை தடுக்க 6 இடங்களில் சோதனைச்சாவடி
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க காவல்துறை சார்பில் 6 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் எடுத்துச் செல்ல மட்டுமே மணல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் லாரி, டிராக்டர், ஆட்டோக்கள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது. மாட்டு வண்டிகளிலும் அதிக அளவில் மணல் கடத்தப்படுகிறது.
பாலாற்றில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் எடுத்து வந்து ஒரு இடத்தில் குவித்து வைத்து லாரிகள் மூலம் பக்கத்து மாவட்டங்கள் மற்றும் பக்கத்து மாநிலங்களுக்கு கடத்திச்சென்று கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள். மணல் கடத்தலை தடுக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக 6 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார். விரிஞ்சிபுரம், விருதம்பட்டு, கே.வி.குப்பம், காவேரிப்பாக்கம், பொன்னை, தார்வழி ஆகிய இடங்களில் இந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அந்தந்தப் பகுதி போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். மணல் ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்து கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.