இலவச அரிசியை விற்பனை செய்த 14 பேருக்கு ரேஷன் பொருட்களை ரத்து செய்ய பரிந்துரை

இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை விற்பனை செய்த 14 பேருக்கு ரேஷன் பொருட்களை ரத்து செய்ய கலெக்டருக்கு உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Update: 2018-10-21 22:15 GMT
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி பக்கத்து மாநிலங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்யப்படுகிறது.

கார், வேன், ரெயில்களில் அரிசி கடத்தி செல்லப்படுவதை பறக்கும்படை தாசில்தார், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்வதுடன், குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள்.

தற்போது ரேஷன் அரிசியை கடத்தி செல்பவர்களை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பிடித்து அவர்களை கைது செய்வதுடன், அவர்கள் யாரிடத்தில் இருந்து அரிசியை வாங்கினார்கள் என்பது குறித்து, கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி விற்பனை செய்ததாக 14 பேருக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதை ரத்து செய்ய உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்