3 விண்வெளி ஆய்வு விருதுகளை பெற்ற சந்திரயான்-1 இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தகவல்

நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்த முதல் செயற்கைகோளான சந்திரயான்-1, 3 விண்வெளி ஆய்வு விருதுகளை பெற்றுள்ளதாக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-20 23:00 GMT
பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி காலை 6.22 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. விண்கலம் சந்திரயான்-1ஐ சந்திரனுக்கு (நிலா) சுமந்து சென்றது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி சந்திரயான்-1 நிலவை சுற்றி துருவ வட்டப் பாதையில் நுழைந்தது. நவம்பர் 14-ந்தேதி அன்று மாலை 6 மணிக்கு அன்றைய இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் முன்னிலையில் சந்திரயான்-1 தாய்களத்தில் இருந்து பிரிந்து சந்திரனில் மோதும் வண்ணம் இம்பேக்ட் ப்ரோப் என்ற சிறிய கலனுக்கு கட்டளை பிறப்பித்தோம். அது நிலவை நோக்கி பறந்து சென்று 27-வது நிமிடத்தில் நிலாவின் தரையில் மோதியது.

அவ்வாறு மோதிய போது தான் சுமந்து சென்ற கருவிகளில் ஒன்று நிலாவின் மிக மிக அரிதான வளி மண்டலத்தில் சில தனிமங்களின் மூலக் கூறுகளைக் கண்டறிந்தது. அதில் மிக முக்கியமானது நிலாவில் நீர் இருப்பதாக அது கண்டறிந்து அனுப்பியது. இதை பார்த்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தோம். சந்திரனின் வளி மண்டலத்தில் நீரின் மூலக்கூறுகள் இருந்தால், அதற்கான காரணம் நிலாவின் தரையில் இருக்கும் நீர், சூரிய ஒளியால் ஆவியாகி வந்திருக்க வேண்டும் என்று கருதினோம். அதன் படி சந்திரயான்-1 சுமந்து சென்ற மற்ற அறிவியல் சாதனங்களின் உதவியுடன், சந்திரனின் முழுப் பரப்பையும் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறை அறிய ஆய்வு செய்தோம். அதன்படி நிலாவின் தரையில் பல இடங்களில் நீரின் மூலக் கூறுகளும், துருவப் பகுதிகளில் உள்ள பெரிய இருண்ட பள்ளத்தாக்குகளில் உறை பனிக்கட்டிகளாக இருப்பதையும் கண்டறிந்தோம். சர்வதேச அறிவியல் அரங்குகளில் அது ஆமோதிக்கப்பட்டு சந்திரயான்-1க்கு அதற்கான உரிமம் அளிக்கப்பட்டபோது உலக அரங்கில் விண்வெளி ஆய்வில் நிலவில் நீர்கண்ட முதல் செயற்கைகோளாய் சந்திரயான்-1 சரித்திரம் படைத்தது.

அமெரிக்கா உள்பட பல சர்வதேச அறிவியலாளர்கள் சந்திரயானின் அறிவியல் சமிக்கைகளை திரும்பவும் ஆய்வுக்குள்ளாக்கி கடந்த மாதம் (செப்டம்பர்) உலகிற்கு அறிவித்தது. அதாவது “சந்திரயான்-1 மூலம் நிலாவில் நீர் இருப்பதை கண்டு பிடித்தது சரியே“ என்பதாகும். நிலவில் நீர் கண்டதற்கு, சந்திரயானின் கட்டுமான சிறப்பிற்கு மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான், பல்கேரியா எனப் பல சர்வதேச நாடுகளை உள்ளடக்கி தலைமைப் பொறுப்பேற்று திட்டத்தை எடுத்து நடத்திய சர்வதேச ஒத்துழைப்பிற்கு என மூன்று சர்வதேச விண்வெளி ஆய்வு விருதுகளை முதல் முறையாக பெற்ற செயற்கைக்கோளானது சந்திரயான்-1 என்பது பெருமையே.

இதன் மூலம் சந்திரயானின் சாதனைகள் உலக அறிவியல் அரங்கில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அத்துடன் கூடுதலான நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் சர்வதேச நாடுகள் இந்தியாவுடன் விண்வெளி ஆய்வில் இணைந்து பணிபுரிய முன்வந்துள்ளன. இந்திய விண்வெளி வீரர்களை இந்தியாவில் இருந்து அனுப்பும் முயற்சிக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு ஆகிய 3 நாடுகளும் நாம் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு சந்திரயானில் நாம் அவர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து கண்ட வெற்றியே காரணமானது.

சந்திரயான் திட்டத்தின் அனுபவங்களும் இந்த வெற்றிகளும் இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கான ஆய்விற்கு “மங்கள்யானையும், திரும்ப நிலவிற்காக சந்திரயான்-2யும், சூரியனின் ஆய்விற்காய் ஆதித்யாவையும் எடுத்துச் செய்யும் துணிவை நமக்குக் கொடுத்துள்ளது.

அதன் முதல் படியில் நாம் மங்கள்யான் மூலம் செவ்வாய்க் கிரகத்திற்கு கோள் அனுப்பி முதல் முயற்சியிலேயே வென்ற முதல் நாடென்ற சரித்திரப் பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 50 வருட இந்திய விண்வெளி ஆய்வுப் பணியில் கடந்த 10 வருடங்கள் பொன்னான வருடங்கள் எனலாம். அதற்கான அடிக்கல் சந்திரயான்-1 என்றால் மிகையாகாது. சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனராக இந்தியா உள்பட 7 நாடுகளைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய விஞ்ஞானிகள் குழுவுடன் பணியாற்றியது எனக்கு பின்னாளில் பல திட்டங்களை ஒரே நேரத்தில் எடுத்து செய்யும் துணிவைக் கொடுத்தது. அதன் பலனே மாதம் ஒரு செயற்கைக் கோள் என்ற திட்டத்தை எடுத்து, 36 மாதங்களில் 30 செயற்கைகோள்களை செய்து முடிக்க முடிந்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்