ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்
அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
சிவகங்கை,
இதுகுறித்து மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து, மத்திய அரசுஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பறித்த அரசாணைகளின் நகல்களை எரிக்கும் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 1.6.1988 முதல் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெற்று வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசின் 7-வது ஊதியக்குழு மற்றும் தமிழக அரசின் 8-வது ஊதியக்குழு ஆகியவை மூலம் அந்த ஊதியம் பறிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மூன்று வகையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இது சமவேலைக்குச் சமஊதியம் என்ற சமூகநீதிக்கு எதிரானதாகும். மேலும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், பிற மாநில இடைநிலை ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது மிகக்குறைவான ஊதியம் பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஊதியத்தில் கடைநிலை ஊழியர்கள் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அடுத்த (நவம்பர்) மாதம் 26-ந்தேதி அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக அரசின் ஊதியக்குழு அரசாணைகள் 234, 303 ஆகியவற்றின் நகல்களை எரிக்கின்ற போராட்டத்தை நடத்த மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் சிவகங்கையில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.