காமநாயக்கன்பாளையம் அருகே வேன்–மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

காமநாயக்கன்பாளையம் அருகே வேனும் –மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ்–2 மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-10-20 23:00 GMT

காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்குபாளையத்தை சேர்ந்த பழனிசாமியின் மகன் விக்னேஸ்வரன் (வயது 22). இவர் தேங்காய் களத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் கள்ளிபாளையத்தை சேர்ந்த ஜெமினி என்பவரது மகன் பாலமுருகன் (18). இவர் கள்ளிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் கள்ளிபாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். தாராபுரம்–பல்லடம் சாலை அம்மன் நகர் அருகே சென்றபோது எதிரே காடை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கீழே விழுந்ததும், அவர்கள் மீதும் வேன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரனும், பாலமுருகனும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்தும் காமநாயக்கன்பாளையம் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து நடந்தவுடன் வேன் டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இந்த குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்