வெள்ளகோவிலில் பனியன் கழிவு மில்லில் தீ விபத்து
வெள்ளகோவில் நாகமநாயக்கன்பட்டியில் பனியன் கழிவுகளை அரைக்கும் மில்லில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் நாகமநாயக்கன்பட்டியில் பனியன் கழிவுகளை அரைக்கும் மில் ஒன்று உள்ளது. இந்த மில் வளாகத்தில் பனியன் கழிவுகள், பஞ்சு மூடைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் மில்லில் பொருத்தப்பட்டிருந்த மின்சார விளக்கு நேற்று திடீரென வெடித்தது. இதனால் பனியன் கழிவு, பஞ்சு மூடைகள் தீப்பிடித்து எரிந்தன.
இதை பார்த்த ஊழியர்கள், வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் எந்திரங்கள், கழிவு பஞ்சு, பனியன் கழிவு என்று பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.