நாகர்கோவிலில் ரெயில் என்ஜின் தானாக பின்நோக்கி ஓடி தடம் புரண்டதால் பரபரப்பு

நாகர்கோவிலில் ரெயில் என்ஜின் தானாக பின்நோக்கி ஓடி தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-20 23:00 GMT
நாகர்கோவில்,

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் ரெயிலில் பராமரிப்பு பணிகள் நடந்தன. இந்த பணிகள் முடிந்ததும் என்ஜினை பிரித்து யார்டுக்கு கொண்டு சென்று சரக்கு ரெயில் நிற்கும் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நள்ளிரவில் அந்த ரெயில் என்ஜின் தானாக திடீரென பின்நோக்கி சென்றது. இதைப் பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் என்ஜின் மீது ஏறி அதை நிறுத்த முயன்றனர். ஆனால் அதற்குள் ரெயில் என்ஜின் தடம் புரண்டது.

ரெயில் என்ஜின் தானாக பின்நோக்கி சென்று தடம்புரண்ட சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட  என்ஜினை மீட்கும்பணி நடந்தது.  இந்த பணி சுமார் 2 மணி நேரம் நடந்தது.

அதன் பிறகு ரெயில் என்ஜின் மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றது நள்ளிரவு நேரம் என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து ரெயில்களும் வழக்கம் போல இயங்கின.

ஆனால் ரெயில் என்ஜின் எப்படி பின்நோக்கி ஓடியது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரெயில் என்ஜின் பின்நோக்கி ஓடி தடம்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்