பூமியைப் பயமுறுத்தும் ஆபத்து!
பூமிக்கு பேராபத்து ஏற்பட இருப்பதாக ஐ.நா. சபை கூறியுள்ளது.
பருவநிலை மாற்றங்களால் உலகுக்குப் பேராபத்து ஏற்படவிருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
அதேநேரம், அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் அவகாசம் இருப்பதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் மேற்பரப்பு 1.5 டிகிரி சென்டிகிரேட் வெப்பமடைந்தால் ஏற்படும் விளைவுகளை ஆராயவும், அதைத் தடுத்து நிறுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல நாடுகளை உள்ளடக்கிய ஐ.நா. பருவ நிலைக் குழு ஆராய்ந்தது.
இதற்காக சமீபத்தில் தென்கொரியாவின் தலைநகரான சியோலில் 195 நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள், அதிகாரிகள் ஒன்று கூடினர். இதில், பருவநிலை மாற்றம் தவிர்க்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
‘‘உலகம் வெப்பமடைவதை 1.5 டிகிரி சென்டிகிரேடுக்குக் குறைக்க ஏற்கனவே பல நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றை துரிதப்படுத்தியாக வேண்டும்’’ என்று அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் வேலரி மேசன் டெல்மோட்டே குறிப்பிட்டார்.
உலகம் வெப்பமடைவதால், வாழும் உயிரினங்களுக்கு பூமி பேராபத்தாக அமைந்துவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளனர். ‘பூமியில் மிகவும் ஆபத்தான புயல்கள், தொடர்ந்த மழை, வெள்ளம், வறட்சி ஏற்பட புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கூடுதலாக 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் போதுமானது’ என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இப்போதாவது விழித்துக்கொள்வோமா?