மாநில வளர்ச்சிக்கு மேற்கொண்ட திட்டங்களை கவர்னர் கிரண்பெடி பட்டியலிட தயாரா? நாராயணசாமி கேள்வி
புதுவை மாநில வளர்ச்சிக்காக மேற்கொண்ட திட்டங்களை கவர்னர் கிரண்பெடி பட்டியலிட தாயரா? என நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மத்திய அரசின் ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுவை செஞ்சி சாலை திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மத்தியில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மீட்கப்படவில்லை, இந்தியர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறிய ரூ.15 லட்சத்தை செலுத்தவில்லை, ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை, தொழிற்சாலைகள் கொண்டு வரப்படவில்லை.
ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசு ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்காமல் மவுனம் காத்து வருகிறார். இதில் இருந்தே ஊழலுக்கு உடந்தையாகி இருப்பது தெரிகிறது.
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசு நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதியை கொடுக்க மறுக்கிறது. நமது மாநிலத்தின் கவர்னர் கிரண்பெடி நிதியை பெற்றுத்தருவதில்லை. மாறாக அவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற விடாமல் கோப்புகளை திரும்பி அனுப்புகிறார்.
கவர்னர் மாளிகை பணம் வசூலிக்கும் மாளிகையாக மாறி வருகிறது. அவர்களுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? இதுதொடர்பாக பகிரங்க விசாரணை நடத்த வேண்டும். கவர்னர் கிரண்பெடி மாநிலத்தின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட திட்டங்களை பட்டியலிட தயாரா? கவர்னர் கிரண்பெடி தனக்குரிய அதிகாரத்தில் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.