திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை; அமைச்சர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் பங்கேற்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வரவுள்ள வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் ஆட்சிமொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி வரவுள்ள வடகிழக்கு பருவமழை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் கடலோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வருவாய் மாவட்டங்கள் அனைத்தும் நேரில் ஆய்வு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக பலத்த மழை,வெள்ளம் போன்றவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 155 இடங்கள் வெள்ளம் பாதிக்கக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு மீட்பு பணிகளும், 42 மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், சப் கலெக்டர் ரத்னா, திருத்தணி எம்.எல்.ஏ நரசிம்மன், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ அ.பாஸ்கரன், நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் கே.சுதாகர், புட்லூர் சந்திரசேகர் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.