நிலத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரம்: தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை

குடியாத்தம் அருகே நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்காததால் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-19 21:55 GMT
குடியாத்தம், 


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகேயுள்ள கதிர்குளம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கீதா என்ற மகளும், பாலு என்கிற பாலசந்தர் (45) என்ற மகனும் உள்ளனர். கீதா திருமணமாகி கணவருடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான பாலு அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கோபாலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலு கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதி கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் பாலு தொடர்ந்து நிலத்தை மாற்றி தரும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை பாலு தனது தந்தையிடம் சென்று ‘உங்களுக்கு வயதாகி விட்டதால் நிலத்தை எனது பெயருக்கு மாற்றிக் கொடுங்கள்’ என்று கேட்டார் அப்போதும் கோபால் மறுத்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த பாலு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பிற்பகல் 3 மணியளவில் கோபால், தனது வீட்டின் எதிரேயுள்ள மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலு அருகே கிடந்த பாறாங்கல்லை எடுத்து கோபாலின் தலையில் போட்டார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருபாகரன், சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிந்து பாலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அருகே நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்காததால் தந்தையை, மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்