ஆந்திர மாநில பஸ்கள் மட்டுமே இயங்குவதால் வெறிச்சோடி காணப்படும் மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையம்
மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
செங்குன்றம்,
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாதவரத்தில் ரூ.32 கோடியில் அடுக்குமாடி பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. மாநிலத்திலேயே முதல் முறையாக அமைக்கப்படும் இந்த அடுக்குமாடி பஸ் நிலையத்துக்கு கடந்த 2011–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
2 தளங்களை கொண்ட இந்த பஸ் நிலையத்தை கடந்த 10–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வரும் அரசு பஸ்களும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
ஆனால் பஸ் நிலையம் திறந்த நாளில் மட்டும் 50–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டன. அதன்பிறகு இந்த பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வருவது படிப்படியாக குறைந்து, நின்று போனது. இதனால் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள் பெரும் அவதியடைந்தனர். இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ் இயக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் திடீர் நடவடிக்கையாக நேற்று மாலையில் இருந்து ஆந்திர மாநில அரசு பஸ்கள் மட்டும் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. ஆந்திராவின் திருப்பதி, நெல்லூர், காளகஸ்தி, சத்திவேடு, விஜயவாடா, ஐதரபாத், நாயுடுபேட்டை, சூளுர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயங்கின.
ஆனால் சென்னை மாநகர பஸ்கள் ஒன்றிரண்டை தவிர தமிழக அரசு பஸ்கள் இங்கிருந்து சரிவர இயக்கப்படவில்லை. வழக்கம் போல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டன. இதனால் மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகும் தமிழக பஸ்கள் இயக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்ட போது, மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து படிப்படியாக தமிழக பஸ்களும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.