பெருந்துறை அருகே மாமனார் வீட்டுக்கு வந்த கல்லூரி பேராசிரியர் சாவு

வெள்ளோடு அருகே மாமனார் வீட்டுக்கு வந்த கல்லூரி பேராசிரியர் மரணமடைந்தார்.

Update: 2018-10-19 23:00 GMT

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அனுமன்பள்ளி பூலக்காட்டை சேர்ந்தவர் பூபதி (வயது 32). இவருக்கும் பெருந்துறை அருகே உள்ள பணிக்கம்பாளையத்தை சேர்ந்த துரை என்பவரின் மகள் நந்தினிக்கும் (29) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2½ வயதில் கிருத்திக் என்ற ஆண் குழந்தை உள்ளது.

பூபதி எழுமாத்தூர் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். ஆயுத பூஜை, விஜய தசமியையொட்டி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி பூபதி தனது குடும்பத்துடன் பணிக்கம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் பூபதி வீட்டில் விருந்து சாப்பிட்டார். பின்னர் அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பூபதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்–இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்