சத்தியமங்கலம் பகுதி பவானி ஆற்றில் காகித ஆலை கழிவுகள் கலக்கவில்லை - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
சத்தியமங்கலம் பகுதி காகித ஆலை கழிவுகள் பவானி ஆற்றில் கலக்கவில்லை என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
ஈரோடு,
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று ஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியுடன் தமிழக அரசு சிறப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து இருக்கிறது. அணைகள், ஏரிகள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். வருகிற 2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஜனவரி 1–ந் தேதிக்கு மேல் எந்த வகையான பிளாஸ்டிக் பயன்படுத்துவது, எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து வருகிறார்கள். மக்களுக்கு தேவையான பிளாஸ்டிக்கை பயனுக்கு வைத்து விட்டு தேவையற்றவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புகை மாசு ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் அதிக புகை வரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக வீதி நாடகங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. சீனப்பட்டாசுகள் விற்கப்படாமல் இருக்க அரசு கவனம் செலுத்தும்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு பசுமை தீர்ப்பாயம் விசாரணையில் உள்ளது. கோர்ட்டு என்ன முடிவு சொல்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காகித ஆலை கழிவுகள் பவானி ஆற்றில் கலப்பதாக வந்த புகார்களில் உண்மை இல்லை. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று முகாம் அமைத்து சோதனை நடத்தி உள்ளனர். எதிர்க்கட்சிகள் ஏதாவது நன்கொடைகள் கேட்டு ஆலைகளுக்கு செல்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் புகார் தெரிவித்து மனுகொடுக்கிறார்கள். அவை செய்தியாக வந்து விடுகிறது. எதிர்க்கட்சிகள்தான் காகித ஆலை கழிவுகள் ஆற்றில் கலப்பதாக கூறுகிறார்கள். அங்குள்ள பொதுமக்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மற்றும் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு காகித ஆலை கழிவுகள் கலக்கவில்லை.
ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் பவானியில் தொடங்கப்பட உள்ளது. இன்னும் 4 மாதங்களில் அது செயல்பட தொடங்கும். மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு உள்ளது. விரைவில் தமிழக அரசின் அனுமதியும் கிடைக்கும். ரூ.300 கோடியில் இந்த திட்டம் முதல் முறையாக பவானியில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.