சபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
சபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கூலி தொழிலாளி ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
பாலக்காடு,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.
இது ஒருபுறமிருக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததால் கோவிலுக்கு செல்வதற்கான முயற்சியில் சில பெண்கள் இறங்கினர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் என பல்வேறு தரப்பினரும் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டினர். ஆனால் அவர்களை சபரிமலைப்பாதைகளில் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தினர். இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில், சபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பாலக்காடு அருகே உள்ள அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாபு (வயது 51) என்பவர் கூட்டுப்பாதை என்ற இடத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கஞ்சிக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கஞ்சிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.