தரமற்ற உரம் வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’ வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் தரமற்ற உரம் வைத்திருந்த குடோனுக்கு வேளாண்மை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாய பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் உர விற்பனை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே உர விற்பனையை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தும்படி வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுருளியப்பன் தலைமையில் தூத்துக்குடி உதவி இயக்குனர் மார்ட்டின்ராணி மற்றும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தனியார் உரக்கடைகளில் முறையாக உரம் விற்பனை செய்யப்படுகிறதா?, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கிறார்களா? என்று ஆய்வு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 53 உரக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஒட்டன்சத்திரத்தில் ஒரு உரக்கடையில் உரிமத்தில் குறிப்பிடாத 10 டன் உரம் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த உரத்தை விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதேபோல் பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் ஒரு உரக்கடை மற்றும் குடோனில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த குடோனில் இருந்த 12 டன் கலப்பு உரத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் உரத்தின் தரம் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த உரக்குடோனை பூட்டி சீல் வைத்தனர். மேலும் உரத்தின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு, அதன் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.