தக்கலை அருகே தொழிலாளி கொன்று புதைப்பு: மனைவியின் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்

தக்கலை அருகே தொழிலாளி கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் மனைவியின் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2018-10-17 22:15 GMT

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுதா (37). கடந்த 2007–ம் ஆண்டு ராஜசேகர் திடீரென மாயமானார்.

இதுகுறித்து சுதாவின் அண்ணன் ரவி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். விசாரணையில் சுதாவும், அவரது கள்ளக்காதலன் ஆன்டனி ஷிபுவும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து, பிணத்தை வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவறை தொட்டியில் வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் போலீசார், கழிவறை தொட்டியை திறந்து ராஜசேகரின் உடலின் பாகங்களையும், எலும்புகளையும் சேகரித்து எடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுதாவை போலீசார் கைது செய்தனர். அவர் தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுதாவின் கள்ளக்காதலன் ஆன்டனி ஷிபுவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆன்டனி ஷிபு நாகர்கோவில் கோர்ட்டில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் நாகர்கோவிலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஆன்டனி ஷிபுவிடம் விசாரணைக்கு பிறகு இந்த கொலை தொடர்பாக முழுவிபரமும் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்