போச்சம்பள்ளியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டி போட்டு நகை பறிப்பு

போச்சம்பள்ளியில் திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல நுழைந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிபோட்டு நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-17 22:45 GMT
போச்சம்பள்ளி,

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது 41). இவருடைய மனைவி கீதா (35). பிரசாத் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் போச்சம்பள்ளி ராசி நகரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரசாத் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அந்த நேரம் மர்மநபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அப்போது கீதாவிடம், நாங்கள் உங்கள் கணவரின் உறவினர்கள் எனவும், திருமண பத்திரிகை அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய கீதா அவர்களை வீட்டிற்குள் வருமாறு அழைத்தார். இதையடுத்து அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் அழைப்பிதழ் வைக்க தட்டு வேண்டும் எனக்கூறினர். இதனால் கீதா தட்டை எடுப்பதற்காக உள்ளே சென்றார்.

அப்போது அந்த மர்ம நபர்கள் கீதாவின் பின்னால் சென்று அவருடைய வாயை பொத்தி, கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் கயிற்றால் அவருடைய கை, கால்களை கட்டி போட்டனர். பின்னர் கீதா அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, வளையல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைத் தொடர்ந்து கீதா கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது கீதா கயிற்றால் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து பிரசாத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவர் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை கட்டி போட்டு கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்