ஊட்டியில் 1,876 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்
ஊட்டியில் 1,876 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரூ.6 லட்சம் மதிப்பில் 1,876 குழந்தைகளுக்கு நெய், கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், பேரீச்சம்பழம் ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை தான் அதிக அளவு மூளை வளர்ச்சி அடைகிறது. அந்த சமயத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகபடியான ஊட்டச்சத்து வழங்க வேண்டும். அப்போது தான் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக வளர்க்க முடியும்.
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து, அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
போஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்றாகும். நீலகிரியில் தேசிய குடும்ப சுகாதாரம் மூலம் கணக்கெடுக்கப் பட்டதில் குள்ளத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, எடை குறைவு உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேற்கண்ட குறைபாடுகளை குறைக்க புரத சத்து, இரும்பு சத்து, நிறைந்த உணவு பொருட்களை தவறாமல் உண்ண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, சமூக நலத்துறை அதிகாரி தேவகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஊட்டி-குன்னூர் சாலை பன்சிட்டி பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.