மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி; டிரைவர் கைது

மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-17 21:45 GMT
மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள செவல்புரை சங்கராபரணி ஆற்றில் சிலர் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணலை வெளியூர்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருவதாக வளத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவுரிசங்கர் மற்றும் போலீசார் செவல்புரை சங்கராபரணி ஆற்றங்கரையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டர் டிரைவரிடம் வாகனத்தை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் தான் ஓட்டி வந்த டிராக்டரை போலீசார் மீது மோதுவதுபோல் வந்து நிறுத்தாமல் சென்றார். அந்த சமயத்தில் போலீசார் ஒதுங்கி கொண்டதால், உயிர்தப்பினர். இதையடுத்து போலீசார், அந்த டிராக்டரை விரட்டி சென்று மடக்கி, அதனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கொழுப்பலூரை சேர்ந்த காந்தி(வயது 50) என்பதும், அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்ததும், இதை தடுத்த போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்றதும் தெரிந்தது.

அதைத்தொடர்ந்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்ததோடு, காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்