சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை ; கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கடலூர்,
நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அண்ணாநகரை சேர்ந்தவர் அபோன்ராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). கடந்த 4.8.2016 அன்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமி சத்தமிட்டதால் பெற்றோர் எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், மணிகண்டனை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் இது பற்றி சிறுமியின் தாய் நெய்வேலி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.