கும்மிடிப்பூண்டி பஜாரில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மீண்டும் முற்றுகை

கும்மிடிப்பூண்டி பஜாரில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-17 22:45 GMT

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் மார்க்கெட், அரசு பள்ளி, சினிமா தியேட்டர் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் கடந்த 1–ந்தேதி மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையறிந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், மதுக்கடை மூடப்படுவதாக தெரிவித்தார். இதனை ஏற்று அன்றைய தினம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கண்ட மதுக்கடையை கடந்த 3–ந்தேதி திறந்திட டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து 3–ந்தேதியும் மதுக்கடை வாசலில் பெண்கள் உள்பட பொதுமக்கள் 100 பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, கிராம நிர்வாக அதிகாரி பாக்கியம் சர்மா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மேற்கண்ட இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மதுக்கடை திறப்பதற்கு முன்பு அங்கு திரண்டு மதுக்கடையை மூடக்கோரி மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, கிராம நிர்வாக அதிகாரி பாக்கியம் சர்மா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை சார்பில் எதிர்ப்புக்கு மத்தியில் மதுக்கடையை திறக்க அனுமதி கொடுக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எதுவாக இருந்தாலும் தாசில்தாரின் விசாரணைக்கு பிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது வரை கடையை திறக்க மாட்டார்கள் என அதிகாரிகள் உறுதி கூறினர்.

இதனை கேட்ட பொதுமக்கள், உள்ளூரில் உள்ள வருவாய்த்துறையினரை ஆலோசிக்காமல் டாஸ்மாக் துறை அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மீண்டும் எடுத்தால் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்தப்போவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்