திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 63 ஆயிரத்து 320 பேர் பதிவு; கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 63 ஆயிரத்து 320 பேர் பதிவு செய்துள்ளனர் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சி வடக்குராஜ வீதி கவடி மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம்,திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பா ர்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது,.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 1–1–2009–ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 2–ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் 3 ஆயிரத்து 553 வாக்குச்சாவடி மையங்களில் இந்த பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தோர் இதுவரை பெயர் சேர்க்காதோர் விண்ணப்ப படிவங்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 13–ந்தேதி வரை 18 வயது நிறைவடைந்தோர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தல், இடமாற்றம் போன்றவற்றுக்காக மொத்தம் 63 ஆயிரத்து 320 பேர் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.