குழந்தைகளின் உடல் உறுப்புகளை விற்பது அதிகரிப்பு கருத்தரங்கில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிர்ச்சி தகவல்

திருச்சியில் குழந்தைகளின் உடல் உறுப்புகளை விற்பது அதிகரித்துள்ளதாக கருத்தரங்கில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

Update: 2018-10-16 22:15 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சைல்டு லைன், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து போலீசாருக்கான போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்த கருத்தரங்கை புத்தூர் பிஷப்ஹீபர் கல்லூரியில் நேற்று நடத்தியது. கருத்தரங்கிற்கு சைல்டுலைன் இயக்குனர் காட்வின் பிரேம்சிங் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெண்களை தெய்வமாக போற்றிய காலம் உண்டு. அதன்பின் பெண்ணை அடிமையாகவும், போதைக்காகவும் பயன்படுத்தியதை பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் மாற்றினர். தற்போது பெண்களுக்கு எதிரானவற்றில் சட்டங்கள், கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்கள் பாலியல் புகார் தெரிவிக்க ‘மீ டூ‘ என்ற இயக்கம் சமீபத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் பிரபல பெண்கள் உள்பட பலர் புகார் தெரிவித்து வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தால் அவர்களது புகாரை போலீசார் அலட்சியப்படுத்தக்கூடாது. ஆதாரங்களை கொண்டு வருமாறு கூறி அலைக்கழிக்க கூடாது. புகாரின் தன்மையை விசாரித்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் போலீசார் சீருடையில் சென்று விசாரிப்பதை தவிர்த்து சாதாரண உடையில் செல்ல வேண்டும். போலீஸ் நிலையத்திலும் அந்த குழந்தைகளை வைத்துக்கொள்ள கூடாது.

குற்றவாளிக்கு தண்டனை மட்டும் வாங்கி கொடுப்பது போலீசாரின் கடமை அல்ல. பாதிக்கப்பட்ட வாதிக்கு நிவாரணம் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழங்க கூடிய தீர்ப்புகளில் கூட சில வழக்குகளில் வாதிக்கு நிவாரணம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு கண் காணிப்பு கேமரா மூன்றாவது கண்ணாக விளங்கி வருகிறது. ஒரு இடத்தில் ஒரு சம்பவம் நடந்தால் அதனை வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் என சமூகவலைத்தளங்களில் உடனடியாக பரவிவிடுகிறது. எனவே போலீசார் ஒரு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்த வேண்டும். எந்த நேரமாக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெளிமாநிலத்தில் வேலைக்கும், பாலியல் தொழிலுக்கும் கடத்தப்பட்டு வந்தனர். தற்போது உடல் உறுப்பு தானத்திற்கும் குழந்தைகளை கடத்தும் சம்பவம் அரங்கேறிவருகிறது. திருச்சியிலும் குழந்தைகளின் உடல் உறுப்புகளை பெற்று விற்பது அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலை அறிந்து அவர்களது உறவினர்களிடம் மூளைச்சலவை செய்து உடல் உறுப்புகளை பெற்றுச்செல்வதாக தகவல் வந்துள்ளது. இதற்காக ஒரு கும்பல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை முன்பு நின்று கொண்டு செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தங்களது கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். குழந்தைகளின் உடல் உறுப்புகளை பெற்று விற்கும் கும்பல் பற்றி நேரடியாக புகார் வர வேண்டும் என அவசியமில்லை. தகவல் தெரிந்தாலே போலீசார் விசாரணை நடத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் வக்கீல் ஜெயந்திராணி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஆட் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சங்கரி, ராஜலட்சுமி, முத்துமாலாதேவி ஆகியோர் கலந்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் பேசினர். கருத்தரங்கில் திருச்சி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருந்து தலா ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என 34 பேர் பங்கேற்றனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வரவேற்று பேசினார். முடிவில் நிர்வாகி பிரபு நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்