கரூர் நகராட்சி வார்டுகளை கண்காணிக்க 225 டெங்கு தடுப்பு பணியாளர்கள் நியமனம் கலெக்டர் தகவல்

கரூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை கண்காணிக்க 225 டெங்கு தடுப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-10-16 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. மேலும் வீடுகள், கடைகள், நிறுவனங்களில் மழைநீர் தேங்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பாரதிதாசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் அன்பழகன், நேற்று வீடு, வீடாகச்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடைந்த மண்பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்கியிருக்கிறதா? வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊரக பகுதிகளுக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு, குறுவட்ட அளவிலும், வார்டு வாரியாகவும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் நிரந்தர பணியாளர்களும், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களும், டெங்குகாய்ச்சல் தடுப்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் டெங்கு தடுப்பு பணியாளர்கள் 225 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் ஒரு நாளைக்கு 11,250 வீடுகளில் ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றார்கள். இப்பணியாளர்கள் சுழற்சி முறையில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வீடு கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் கான்கிரீட்டுக்காக பயன்படுத்தும் தண்ணீர் 3 நாட்களுக்கு மேல் தேங்கி இருக்காத வகையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

தங்கள் வீட்டைச்சுற்றி தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த மண்பானை உள்ளிட்ட தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்கள் இருந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள நபர்களுக்கோ, குழந்தைகளுக்கோ காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பின் சுயவைத்தியம் மேற்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று முறையாக மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், நகர் நல அலுவலர் ஆனந்தகண்ணன், தாசில்தார் ஈஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்