ரெயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம்: அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

ரெயில்வே சுரங்கப்பாதை பணி தாமதம் ஆவதை கண்டித்து, அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-10-16 21:30 GMT
சிங்காநல்லூர்,

இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேலான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இருகூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு முன்பாக ரெயில்வே கேட் வழியாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வந்தனர். மேம்பாலம் கட்டிய பின்னர் ரெயில்வே கேட்டை மூடி விட்டனர். இதனால் 2 கி.மீட்டர் தூரத்துக்கு பாலத்தை சுற்றித்தான் பள்ளிக்கு வரவேண்டியது உள்ளது. எனவே மாணவ-மாணவிகள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.

இந்த பிரச்சினையை தீர்க்க, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரெயில்வே துறையினரின் பணி முடிந்து விட்டது. ஆனால் தமிழக நெடுஞ்சாலைத்துறைதான் அடுத்த பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால் 2 வருடமாக அந்த வேலை கிடப்பில் போடப்பட்டதால் மாணவ-மாணவிகள் சுரங்கப்பாதையை உபயோகிக்க முடியாமல் தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு வரும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை சுரங்கப்பாதை பணி முடிவடையவில்லை.

இந்தநிலையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் போராட்டம் நடந்தது. மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் தினேஷ், தாலுகா செயலாளர் கோகுல கண்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவீந்திரன்,துணை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல்அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் கூறும்போது, சுரங்கப்பாதை பணியை உடனே முடிக்க வேண்டும். இதற்கான உறுதிமொழியை அளிக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.

இருகூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத்துறை தனி அதிகாரி சுஜாதா, பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணி, இருகூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஜெகதீசன், போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ், சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அர்ஜுன், ஜெய தேவி, மற்றும் மாணவர் சங்கத்தினர், பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறும்போது, 2 மாதத்தில் சுரங்கப்பாதை பணியை முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கூறும்போது, ‘தினமும் குழந்தைகள் தண்டவாளத்தை கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர். குழந்தைகள் வீட்டுக்கு வரும்வரை நாங்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிறோம் இந்த அவல நிலை மாற வேண்டும் எனில், விரைவில் சுரங்கப்பாதை வேலை நிறைவு பெற வேண்டும்.தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து செயல்பட்டு சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்தால் பள்ளிக் குழந்தைகள் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக ஊரில் வாழும் 10 ஆயிரம் குடும்பங்களும் நிம்மதியாக இருக்கும்’ என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்