பேரம்பாக்கம் அருகே கடைக்காரர் உள்பட 2 பேருக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு

பேரம்பாக்கம் அருகே தொழில்போட்டி காரணமாக கடைக்காரர் உள்பட 2 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-10-16 21:30 GMT

திருவள்ளூர்,

பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அருண் என்கிற ராஜேஷ், அவரது நண்பர் தினேஷ் மற்றும் புதுமாவிலங்கையை சேர்ந்த ஸ்டீபன் ஆகியோர் தங்களுக்குள் இருந்த தொழில்போட்டி காரணமாக பிரபு தங்களுக்கு போட்டியாக சத்தரை கிராமத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை வைக்கக்கூடாது எனக்கூறி தகராறு செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் பிரபு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான சுரேஷ் என்பருடன் கடம்பத்தூர் நோக்கி வேலையின் காரணமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த அருண், தினேஷ், ஸ்டீபன் ஆகியோர் அவரை தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கி கத்தியால் தலையில் வெட்டியுள்ளனர்.

இதைபார்த்து தடுக்க வந்த அவரது நண்பரான சுரேஷ் என்பவரையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பிரபு மப்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்